மதுரை : முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம்.!
வடபழஞ்சியில் கொரோனா நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை போன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து பலர் மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமும் , ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை, தியாகராஜர் என்ஜினியரிங் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி, வேளாண்மை கல்லூரி, திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தல் மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், வடபழஞ்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான எல்காட் அலுவலகத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளனர். அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள், ஐசியூ என அனைத்து வசதிகளுடன் 900 படுக்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனையை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.