FACEBOOK நிறுவனருக்கு எச்சரிக்கை மணி அடித்த மத்திய அமைச்சர்! பேஸ்புக் நிறுவனம் சிந்திக்கவே கூடாது….
மத்திய அரசு பேஸ்புக் பயன்படுத்தும் இந்திய மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் யாருக்கும் கொடுக்க கூடாது என அந்நிறுவனத்தை எச்சரித்துள்ளது. பேஸ்புக் மூலம் தகவல்களை திரட்டி அதன் மூலமாக பல நாடுகளின் தேர்தல் முடிவுகளையே மாற்றும் மோசடியில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் அமெரிக்கா அதிபர் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்களில் மோசடி செய்திருப்பதாக பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. திருடப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களை வைத்து அவர்களது ஈடுபாடுகளை தெரிந்து கொண்டு, எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய பொய்யான செய்திகளை அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர், அங்கு நடந்த சட்டவிரோத செயல்களை, பிரிட்டனின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டார். மோசடிகள் அம்பலம் ஆனதை தொடர்ந்து அந்த நிறுவனத்துடனான உடன்ப்பாட்டை முகநூல் நிறுவனம் ரத்து செய்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை பிரிட்டன் தகவல் ஆணையர் மேற்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களிடம் எந்த அனுமதியும் கேட்காமலே சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பேஸ்புக்கின் செயல் மிக மோசமானது என கண்டனம் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப துறையில் நாம் மிக வலுவாக உள்ளதால், இந்தியர்களான நமது தகவல்களை திருடுவது குறித்து பேஸ்புக் நிறுவனம் சிந்திக்கவே கூடாது என்றார். இந்தியாவின் தேர்தல் முறையில் சமூக வலைதளங்கள் தலையிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.சமூக வலைதளங்களில் இந்திய தேர்தல் பற்றிய தகவல்கள் கசிவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.தகவல் தொழில்நுட்ப துறை மிகவும் பாதுகாப்பாக கவனமாக கண்காணிக்கப்படுகிறது. அதையும் மீறி ஏதேனும் பிரச்சனை என்று நிகழ்ந்தால், மத்திய அரசு பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்ப கூட தயாராக உள்ளதாக எச்சரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.