அதிபர் தேர்தலை தாமதப்படுத்த விரும்பவில்லை.. திடீரென முடிவில் பின்வாங்கிய டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்த விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி.
குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ளது.
இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மின்னஞ்சல் மூலம் மக்கள் வாக்களிப்பதில் சில முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் தேர்தலை தாமதப்படுத்தலாமா? என நேற்று கோரிக்கை விடுத்த நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதிலிருந்து பின்வாங்கினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், மின்னஞ்சல் வாக்குகளை எண்ணி முடிக்க பல வாரங்கள், அல்லது சில மாதங்கள் ஆகும் எனவும், அதுவரை என்னால் காத்திருக்க முடியாது என தெரிவித்தார்.