மேட்ச் பிக்சிங்.. தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை!
ஜோகன்ஸ்பர்க்: மேட்ச் பிக்சிங் புகாரை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் லோன்வாபோ டிசோபே. கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரேம்ஸ்லாம் டி20 போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியதில் டிசோபே மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. டிசோபே மீது பத்து வழக்குகள் உள்ளன. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முயன்றது, ஸ்பாட் பிக்சிங்கு தொடர்பு கொண்டவர்கள் குறித்த விவரங்களை அளிக்காதது, விசாரணைக்கு ஆஜராகமல் மறுத்தது, விசாரணையை இழுத்தடித்து தாமதப்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.