நாக்பூரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயம்: 4 பேர் கைது
நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள பர்சிங்கி என்னும் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த நபர் வீட்டுக்கு வாங்கி வந்த ஆட்டிறைச்சியை மாவட்டிறைச்சி என்று தவறாக கருதி 6, 7 பேர் கொண்ட கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் ரத்த காயமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரியானாவில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று கூறி ஓடும் ரயிலில் ஜூனைட் என்ற இளைஞர் அடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மராட்டியத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. பசு பாதுகாப்பு என்ற போர்வையில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.