3 நாடுகளுக்கு விமான சேவை இயக்க முடிவு.!
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், . அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா ‘ஏர் பப்பில்ஸ்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது; பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து இந்த இடங்களுக்கான சர்வதேச விமானங்கள் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளன.
இந்த சர்வதேச விமானப் பயணம் வழக்கமான சர்வதேச பயணங்களைப் போன்றதல்ல என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் அதற்கு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது .
இந்த நாடுகளில் உள்ள சில விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனங்கள் பாதுகாப்பது நடவடிக்கைகளுடன் விமான சேவை இயக்க முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளது. வழக்கமான கட்டணங்களை விட குறைவான கட்டணங்கள் தான் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தூதரக அதிகாரிகள் போன்ற வெளிநாட்டவர்களும், இந்திய ஓவர்சீஸ் குடிமக்கள் அட்டை பெற்றவர்களும், இந்தியக் குடிமக்களும் இந்த விமானங்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள் பயணிப்பதற்கு போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு ஜூலை 17 முதல் விமானம்:
அமெரிக்க விமான சேவையான யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 17 முதல் 31-ஆம் வரை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே 18 விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் நெவார்க் இடையே யுனைடெட் ஏர்லைன்ஸ் தினமும் விமானம்இயங்கும் என்றும், டெல்லி மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று முறை விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17 முதல் 31 வரை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் 18 விமானங்களை இயக்க யுனைடெட் ஏர்லைன்ஸுடன் ஒப்பந்தம் உள்ளது. இந்த விமானங்கள் இடைக்கால விமானமாகும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறினார்.
பிரான்ஸிற்கு ஜூலை 18 முதல் விமானம்:
ஜூலை 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி வரை டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பாரிஸிக்கு 28 விமானங்கள் இயங்க உள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு விமானம்:
டெல்லி – லண்டன் இடையே ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இருந்து லுஃப்தான்சா விமான நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை வந்துள்ளது. இந்த கோரிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அந்த கோரிக்கையை செயல்படுத்துகிறோம் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்கள்:
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ஜூலை 9 அன்று விமானங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரவும், ஐக்கிய அரபு எமிரேட் மக்களை திரும்பி கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த விமான சேவை ஜூலை 12 முதல் 26 வரை இருக்கும். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு பிறகு மே 25 ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களை மீண்டும் இயங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.