டெல்லி கலவரம்: கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!
டெல்லி கலவரத்தில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் மசூதியை சூறையாடிய வழக்கில் தந்தை மிதன் மற்றும் மகன் ஜோனி குமார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாமீன் மனு கோரி இருந்தனர். இந்த ஜாமீனை மீதான விசாரணை கடந்த ஜூலை 17-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் குப்தா கூறியதாவது, இவர்கள் இருவரும் இந்த வழக்கில் பொய்யாக சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப். ஐ. ஆரில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குமாரின் தாயார் கண்பார்வையற்றவர் என்பதால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வருவதாகவும், நடந்த கலவரத்தில் அவர் வீடு சேதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதனையடுத்து, மாநிலத்திற்காக ஆஜரான சிறப்பு பொது வழக்கறிஞர் ஜெனெந்தர் ஜெயின், இவர்கள் இருவரும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை கொள்ளையடித்து, தீ வைத்துள்ளனர். 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் இவர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.