தனியார் மருத்துவமனைகளை திறக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மதுரையில் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் , ஊரடங்கு தளர்வுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற சில மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில், பொதுமுடக்கம் காரணமாக அனைத்து கடைகளும் திறக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் திறக்காமல் உள்ளதால், சாதாரண நோய்களுக்கு கூட சிகிச்சை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பலர் குற்றச்சாட்டி உள்ளனர்.
இந்த குற்றசாட்டை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினய் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, 120 தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளை உடனடியாக திறக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவமனைகளை திறக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுத்தார்.