எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 17 பேர் காயம்!
எகிப்த் நாட்டில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் காயமடைந்தர். மேலும், 12 கார்கள் தீயில் எரிந்து நாசமாகியது.
எகிப்த் நாட்டிலுள்ள கெய்ரோ நகரில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஷுகேர்-மோஸ்டோரோட் என்ற கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப்லைன் உள்ளது. அந்த குழாயிலிருந்து எண்ணெய் கசிந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடினர். மேலும், தீப்பிடித்ததை அறிந்ததும், குழாயின் வால்வுகள் உடனடியாக மூடப்பட்டதால், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 17 பேர் காயமடைந்ததாகவும், 12க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில், சாலையில் வாகனங்கள் கடந்து செல்வதால் ஏற்பட்ட தீப்பொறி, குழாயில் கசிந்து கொண்டிருந்த அந்த கச்சா எண்ணெய் மீது உரசிய காரணத்தினால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.