திலீப்புக்கு பகிரங்கமாக ஆதரவு அளிக்கும் கிரிக்கெட் நடிகர்.. கழுவி ஊற்றும் மக்கள்
திருவனந்தபுரம்: மொத்த கேரளாவும் நடிகர் திலீப்பை வறுத்தெடுத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அவருக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பிக்சிங்கில் ஈடுபட்டவர்தான் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவரால் அம்மாநில கிரிக்கெட் உலகத்திற்கே அப்போது தலைகுனிவு ஏற்பட்டது. 2013 முதல் இவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதன்பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீசாந்த், கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இப்போது கேரள மாநிலமே திலீப்பை கழுவி, கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஸ்ரீசாந்த்தோ, திலீப்புக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். ஏற்கனவே கேரள மானத்தை, சர்வதேச அரங்கில் கப்பலேற்றிய ஸ்ரீசாந்த், இப்போது இன்னொருவருக்கும் வக்காலத்து வாங்குகிறார் என திட்டி தீர்க்கிறார்கள், மலையாளிகள்.
ஸ்ரீசாந்த் கூறுகையில், மொத்த மக்களும் திலீப்புக்கு எதிராக கோபப்படுவது சரியில்லை என்றும், திலீப் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது சொந்த அனுபவத்திலிருந்து இதை கூறுவதாக சுய அனுதாபமும் பட்டுக்கொண்டுள்ளார் அவர்.
இதனிடையே, எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் என்பவரும் திலீப்புக்கு ஆதரவாக கருத்து கூறி சமூக வலைத்தளங்களில் வறுபட்டுக்கொண்டுள்ளார். திலீப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என டிஜிபி டி.பி.சென்குமார் கூறிய ஒன்றரை நாட்களில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளாரே, என ஜார்ஜ் சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளார்.
கேரள மக்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், திலீப்புக்கு எதிரான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும் எம்எல்ஏ ஜார்ஜ் கூறியுள்ளார். இவரது கருத்து மக்களிடம் குறிப்பாக பெண்கள் அமைப்பினரிடம் கண்டனத்தை பெற்றுள்ளது.