பொய்வாக்குமுலம் அளித்த அனுராக் தாக்குர் மன்னிப்பு கோரினர் ………
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிசிசிஐ முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். மேலும், பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை) பிரதிநிதியை நியமிப்பது, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை அதன் தன்னாட்சி அந்தஸ்தைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு ஐசிசியிடம் அனுராக் தாக்குர் கோரிக்கை விடுத்ததாக லோதா குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அனுராக் தாக்குர், அதுபோன்ற கடிதம் எதையும் கேட்கவில்லை என தெரிவித்தார். ஆனால் ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அனுராக் தாக்குர் ஐசிசியிடம் கடிதம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், அனுராக் தாக்குர், பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பதவி நீக்கம் செய்தது.
மேலும் பிரமாணப் பத்திரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அனுராக் தாக்குர், நான் வேண்டுமென்றே பொய் வாக்குமூலம் அளிக்கவில்லை என தெரிவித்ததோடு, எந்த மாதிரியான சூழலில் தவறு நடந்தது என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் அனுராக் தாக்குர் மன்னிப்பு கோரி முன்னதாக சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தது.
மேலும், அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும் வகையில் ஒரு பக்க அளவிலான சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன், அனுராக் தாக்குர் அவ்வாறு மன்னிப்பு கோரும் பட்சத்தில் அதனை ஏற்று, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
பின்னர், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 14- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அன்றைய தினம் அனுராக் தாக்குர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும் வகையில் ஒரு பக்க அளவிலான சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை அனுராக் தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
இவர் பிஜேபியின் மாநிலங்களவை உறுப்பினர் என்பதும் குறுப்பிடத்தக்கது .