ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் -ஸ்டாலின் அறிக்கை

Default Image

23.10.2009-க்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘தற்போதைய நிதி நிலைமை’யைக் காரணம் காட்டி, முதலமைச்சரை முன்நிறுத்தும் விளம்பரங்களையோ – அவசியமில்லாமல் கமிஷனுக்காக அவசரப்படுத்தப்படும் டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதைத் ‘தள்ளி வைக்க’ முடியாத நிதித்துறை அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள நிதித்துறை, 23.10.2009-க்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு ஊழியர்களான மருத்துவர்களுக்கு அநீதியையும் – அமைச்சர்கள் கமிஷனுக்காகவே விடும் டெண்டர்களுக்கு நிதியையும் அளிப்பது வருத்தமளிக்கிறது. தற்போது கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் ‘முன்னணிக் கள வீரர்களில்’ முக்கியமாக இருக்கிறார்கள். இதுபோல்தான் ஓய்வு பெற்ற மருத்துவர்களும் தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று பணியாற்றியவர்கள். “அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது” என்றால், “டெண்டர்களுக்கு 1000 கோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று அனுமதியளிப்பதற்கு” எங்கிருந்து நிதி வருகிறது?

அரசுக்கு – குறிப்பாக, மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது மாபாதகச் செயல் என்பதை அ.தி.மு.க. அரசு உணர வேண்டும்.23.10.2009-க்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்