ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பற்றி இத்தாலி பிரதமர் கடும் விமர்சனம்!!

இத்தாலிக்கு அகதிகள் அதிக அளவில் வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பாலோ ஜென்டிலோனி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கத்திய பால்கன் பிரதேச நாடுகளின் மாநாடு இத்தாலியில் உள்ள டிரியெஸ்டே நகரில் நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்தது:
லிபியாவையொட்டிய கடற்பகுதியிலிருந்து கடந்த சில நாள்களில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி மீட்டுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 85,000 பேர் அகதிகளாக இத்தாலிக்குள் வந்துள்ளனர். இது அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் விஷயத்தில் இத்தாலி தனது பங்களிப்பை தொடர்ந்து சிறப்பாக வழங்கி வருகிறது. ஆனால், அகதிகளை ஏற்கும் கொள்கைகளை ஒரு சில நாடுகள் மட்டுமே ஓய்வின்றி கடைப்பிடித்து வருகின்றன. மற்ற நாடுகள் இதில் அக்கறை செலுத்தாமல் உள்ளன.
எனவே, அகதிகளை ஏற்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும். இத்தாலியின் சுமையைக் குறைக்க வேண்டும் என்றார்.
author avatar
Castro Murugan

Leave a Comment