“வெளியில் ஆயூர்வேதம்: உள்ளே விபச்சாரம்”- புதுச்சேரியில் பகீர் கிளப்பிய கும்பல்!
ஆன்மிக நகரமான புதுச்சேரியில் சில நாள்களாக விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறந்து வருகின்றது. பிரெஞ்சுக் கட்டடக் கலையையும், கலாசாரத்தையும் ஒரு சேரக் கொண்டிருக்கும் புதுச்சேரியைக் காண ஆயிரக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வருகை தருகின்றனர். விளிம்பு நிலையில் இருக்கும் அப்பாவிப் பெண்களை மூளைச் சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களுக்குப் புதுச்சேரியில் பஞ்சமில்லை. சமூக விரோதக் கும்பல்களின் டார்கெட் இவர்கள்தான்.
பணத்தாசை பிடித்த இந்தக் கும்பல் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று மகளிர் அழகு நிலையம், மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் தங்கள் தொழிலை சிரமமின்றி செய்து வருகின்றனர். அப்படி புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் “டிரடிஷனல் ஸ்டைல் பியூட்டி & ஆயுர்வேதிக் கிளினிக்” என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்திருக்கின்றது. ஆனால் அங்கு வந்து செல்பவர்களின் செயல்களில் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில் அந்த இடத்தை ரகசியமாகக் கண்காணித்த காவல்துறை அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தது.
அதனடிப்படையில் சிறப்பு அதிரடிக் காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது மசாஜ் சென்டரை நடத்தி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த கார்த்திக், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி தமிழ்ச் செல்வி, சாமிப்பிள்ளைத் தோட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தது காவல்துறை. மேலும் அவர்களிடம் இருந்து 12 செல் போன்கள், 24,680 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த சோதனையில் கடலூர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர். “அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் விரைவில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்த காவல்துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன், “முக்கியக்’ குற்றவாளியான குருசுக் குப்பத்தைச் சேர்ந்த ராதிகா (எ) ஆரோக்கியமேரி விரைவில் கைது செய்யப்படுவார்” என்றும் தெரிவித்தார்.