ஈரோடு அருகே மர்மமான முறையில் தீப்பிடித்து தாய், மகள்கள் உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை!
போலீசார், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்ததில் தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு அருகே தயிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. விவசாயியான இவர் இன்று அதிகாலை தமது விளை நிலத்தை பார்வையிடச் சென்று விட்டார். இவரது மனைவி ஜெயமணி, கல்லூரியில் படிக்கும் மூத்தமகள் தனுஷ்யா, 7 வயது மகள் பவித்ரா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
காலை 7 மணி அளவில் அவர்களது வீட்டிற்குள் இருந்து புகை வருவதைக் கண்ட பொதுமக்கள், தீ அணைப்பு துறைக்கும், கவுந்தபாடி காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து விட்டு, உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கையறை முழுவதும் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட மக்கள், தண்ணீர் ஊற்றி அணைத்ததுடன், குளியலறை அருகே இறந்து கிடந்த தாய், மகள்களை மீட்டனர். மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சோதனை செய்த போது, படுக்கையறையில் மண்ணெண்ணெய் பாட்டில் கிடைத்தது.
குடும்பத் தகராறு காரணமாக மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், துளி கூட தீக்காயம் ஏற்படாத அளவுக்கு அவர்கள் தப்பி குளியலறை வரை சென்று இருப்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக கவுந்தபாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.