ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்ஐவி மருந்துகள் கொரோனா இறப்புகளை கட்டுப்படுத்தவில்லை.! சோதனையை கைவிடுவதாக WHO.!
கொரோனா இறப்புகளை கட்டுப்படுத்தாத மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்ஐவி மருந்துகளின் சோதனைகளை கைவிடுவதாக WHO அறிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மருந்துகளை கண்டுபிடிக்க பல டாக்டர்களும், ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உதவும் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அந்த மருந்து கொரோனா இறப்புகளை தடுக்காது என்றும், எனவே தற்காலிகமாக இதனை நிறுத்தி வைப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் உயர் விஞ்ஞானி அறிவித்திருந்தார்.
மேலும் உலக சுகாதார அமைப்பால் பரிசோதிக்கப்பட்ட பிற மருந்துகளான எபோலோ மற்றும் எயிட்ஸ் நோய்க்கு பயன்படுத்தப்பட்ட சிகிச்சைகளை இன்னமும் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது உலகளவில் 200,000க்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், மற்றும் எச்ஐவி மருந்தான லோபினாவிர் /ரிடோனாவிர் ஆகிய மருந்துகளின் சோதனை முடிவுகளை உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டது.
அதில் இந்த மருந்துகள் கொரோனா இறப்பை கட்டுப்படுத்தவில்லை என்பதால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்ஐவி மருந்துகளின் மீதான சோதனைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.