2023-க்குள் தனியார் ரயில் சேவை துவக்கம்!
2023-க்குள் தனியார் ரயில் சேவை துவக்கம்.
இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர், வி.கே.யாதவ், இந்தியாவில், தனியார் ரயில் போக்குவரத்து, வரும், 2023, ஏப்ரல் முதல் துவங்கும் என தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வே, தனியார் மூலம், 151 நவீன ரயில்களை, 109 வழித்தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு தகுதியுள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2023 ஏப்ரல் முதல், தனியார் ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால், ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதாக கருத வேண்டாம் என்றும், 2,800 ரயில் சேவையில், 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தனியார்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி, சேவையை மேற்கொள்ள வேண்டும் என்றும், விமானம், சொகுசு பஸ் கட்டணங்களின் அடிப்படையில், தனியார் ரயில் கட்டணம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரயில் தடம், ரயில் நிலையங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்த, தனியாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வருவாயில் குறிப்பிட்ட பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும் என்றும், ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் பட்சத்தில், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை, இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.