விம்பிள்டன் டென்னிஸின் இறுதிப் போட்டியில் ஃபெடரர்!
விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் மோதினர். இதில் 12-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், அவர் மீது எதிர்ப்பார்ப்புகள் எகிறியிருந்தது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர், 7-6 (7/4), 7-6 (7/4), 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். ஃபெடரர், விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைவது இது 11-வது முறையாகும். இறுதிப் போட்டியில் அவர் உலகின் ஆறாம் நிலை வீரரான, போசனியாவின் மரின் செலிக்குடன் மோத உள்ளார்.
நடப்பு விம்பிள்டன்னையும் ஃபெடரர் தன் வசப்படுத்தும்பட்சத்தில், விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறை கைப்பற்றும் முதல் வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைப்பார். குறிப்பாக, கென் ரோஸ்வாலுக்குப் பிறகு, அதிக வயதில் (35) விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் ஃபெடரர் ஆவார். கென் ரோஸ்வால் தனது 39-வது வயதில், விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விம்பிள்டன் இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.