லாக்-அப்பில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம்.! சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறல் மன்னிக்க கூடாத குற்றம் – கமல் ட்வீட்.!
சிறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்க கூடாத குற்றம் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது உயிரிழப்புகளை தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல்துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்க கூடாத குற்றம் என்று கூறியுள்ளார். அவரது இந்த ட்வீட்டுக்கு பலர் தங்களது ஆதரவுகளை கமெண்ட் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 23, 2020