நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது?கழகத்தில் டிடிவி தினகரன்?
ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன், அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. எங்கள் அமைப்பின் பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியிருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.இதற்கு முன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திராவிடத்தை புறக்கணித்து விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. பெயர் காரணம் கூறி வெளியேறியிருப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், நாஞ்சில் சம்பத் என்னை விமரிசித்தது போல நான் அவரை விமரிசிக்க விரும்பவில்லை. இடைக்கால அமைப்பு என அனைத்தும் தெரிந்த நாஞ்சில் சம்பத் அதனை மறைக்கிறார். ஜெயலலிதா படம் கொண்ட கொடியை எதிர்க்கிறார்கள். ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆரின் மொத்த உருவம்தான் ஜெயலலிதா.
தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு 3 பெயர்களை கொடுத்திருந்தோம். நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் திராவிடமும் இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் அமைப்புக்கு 3 பெயர்களை வழங்கியது. அதில் ஒரு பெயரை தேர்வு செய்தோம்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் கொடியை அமைத்தோம். அதுபோன்ற கொடியை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் காப்புரிமை பெறவில்லை. அதிமுக கொடியில் அண்ணா இடம்பெற்றுள்ளார். எங்கள் கொடியில் 50 சதவீதம் வெள்ளை நிறம். அதன் நடுவில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளோம். இதுபோன்ற கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் காப்புரிமை பெறாத நிலையில் அதனை அதிமுகவினர் எதிர்க்கின்றனர் என்று கூறினார்.