பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை.! – அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்திய – சீன எல்லை பகுதிகளின் ஒன்றான, லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்களும், சீன ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதனால், லடாக் எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதில் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். நம் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கிறது. ஆனால், நாட்டுபற்று என வந்தால் நாம் ஒருதாய் பிள்ளையாகவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பவர் முதன்முதலாக நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தார். தற்போது, ராணுவ வீரர் பழனி தனது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் திமுகவும் தமிழக மக்களும் முதலில் வருவார்கள்.

முந்தைய போர்களின் போது ஜவர்கலால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் என பிரதமர்களின் கரங்களை திமுக வலுபடுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இந்தியா தனது ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும். இந்தியா அமைதியாக இருக்க விரும்புகிறது. அதே நேரத்தில் பதிலடி கொடுக்கவும் இந்தியா தயங்காது. என பிரதமர் பேசியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.

நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும். போர் வரும்போது பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம். என தனது கருத்துக்களை அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.