விழிபிதுங்கும் இபிஎஸ் -ஒபிஎஸ்! திடீர் போர்க்கொடி எடுத்த மூத்த நிர்வாகிகள்….

Default Image

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கட்சியில் காலியாக உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பதவிகளை உடனே நிரப்பக்கோரி மூத்த நிர்வாகிகள் சிலர்  போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். சசிகலா கட்சியை வழிநடத்தி வந்தார். பின்னர், சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டதால், ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். இதனால், ஓபிஎஸ் அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அதனால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதிமுக கட்சியையும் வழிநடத்தி வந்தார்.

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி எடப்பாடி அணியுடன் இணைந்தார். அன்றைய தினமே ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், செப்டம்பர் 12ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்சுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட்ட கே.பி.முனுசாமி தவிர வேறு யாருக்கும் அதிமுக கட்சியில் புதிய பதவிகள் வழங்கப்படவில்லை.இரண்டு அணிகளும் இணைந்து 7 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் எந்த பதவியும் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குறிப்பாக, டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த பதவிகளில் பெரும்பாலான இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதுவும் ஜெயலலிதா பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24ம் தேதிக்கு முன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், யாருக்கும் பதவி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து இரவு 9.15 மணி வரை நடந்தது.

இதில் அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். 3 மணி நேரத்துக்கு மேல் நடந்த கூட்டத்தில் காரசார வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ”அதிமுகவில் தனியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி எடப்பாடி அணியுடன் இணையும்போது பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. குறிப்பாக, கட்சியை வழிநடத்தி செல்ல 11 பேர் குழுவில் இன்னும் 7 பேர் நியமிக்கப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த பதவிகளில் பெரும்பாலான பதவிகள் ஓபிஎஸ் அணியினருக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

அதேபோன்று காலியாக உள்ள மாவட்ட செயலாளர் பதவிகள், மேலும் வக்புவாரியம், பாடநூல் வாரியம், வீட்டு வசதி வாரியம், டெல்லி பிரதிநிதி ஆகிய பதவி காலம் விரைவில் நீட்டிக்கப்பட வேண்டும். அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. அந்த பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் காரசார விவாதம் நடந்தது. ஆனாலும், முதல்வர் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இப்படி, தொடர்ந்து அதிமுகவுக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் முன்னணி தலைவர்களுக்கு பதவி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது குறித்தும் குரல் எழுப்பப்பட்டது.

தற்போது, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அமைச்சர்களை சந்தித்து பேச முடிகிறது. பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 2ம், 3ம் கட்ட நிர்வாகிகள் அமைச்சர்களை நேரடியாக சந்தித்து எந்த காரியமும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தொண்டர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். பெரிய அளவில் அதிமுக பொதுக்கூட்டங்கள் கூட நடத்தப்படாமல் உள்ளன. இதையெல்லாம் சரி செய்து, அதிமுக கட்சியை முன்னணி தலைவர்கள் பாரபட்சம் பார்க்காமல் வழிநடத்தி செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சில சமயங்களில், உரத்த குரலில் சிலர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சமாதானம் செய்தனர்” என்றனர். இதை தொடர்ந்து நேற்றிரவு அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO