ஈரடுக்கு பாலத்திற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சூட்டிய முதல்வர்.!
இந்த ஈரடுக்கு பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா பெயரை வைத்துள்ளார்கள்.
சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இந்த ஈரடுக்கு பாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில், சேலம் குரங்குசாவடி முதல் நான்கு சாலை வரையிலான இரண்டடுக்கு பாலத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரையும், ஏ வி ஆர் ரவுண்டானா முதல் சாரதா கல்லூரி சாலை வரையிலான மேம்பாலத்திற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரையும் சூட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.