#BREAKING: ஆர்.எஸ்.பாரதி ஜாமீன்- உயர்நீதிமன்றத்தை நாட காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு .!
ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மே 31-ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில், ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றம் வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.