உத்தரபிரதேசத்தில் கோவிலுக்கு உள்ளே சென்றதால் தலீத் இளைஞன் சுட்டுக் கொலை
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் 17 வயது தலீத் இளைஞன் தூங்கிக்கொண்டிருந்த பொழுது 4 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
இது குறித்து விகாஸின் தந்தை கூறுகையில், எனது மகன் கடந்த ஜூன் 1 ம் தேதி அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டொம்கேரா கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றான். இதனை கண்ட அங்குள்ள உயர்சாதி இளைஞர்கள் விகாஸ் குமார் கோவிலுக்கு உள்ளே நுழைவதை தடுத்துள்ளனர் .இதனை பொறுப்படுத்தாமல் விகாஸ் குமார் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளான்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளைஞர்கள் விகாஸை தாக்கியுள்ளனர் .
இதன் பின் விகாஸ் குமார் தரப்பிலிருந்து அந்த இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . ஆனால் அந்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர் .இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு விகாஸ் குமார் வீட்டிற்கு வந்த , லாலா சவுகான், ஹோராம் சவுகான், ஜஸ்வீர், மற்றும் பூஷண் ஆகிய நான்கு பேர், வீட்டிற்கு வெளியே விகாஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.
குண்டடிப்பட்டு கிடந்த விகாஸை தூக்கிக்கொண்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறந்துவிட்டார் .இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு பொறுப்பாளரான காவல் அதிகாரி நிராஜ் குமார் கூறுகையில்,கோயில் அல்லது தீண்டாமை தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு வயலில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் .இச்செய்தியை தி டெலிகிராப் பத்திரிக்கை வெளியிட்டது.
இக்கொலைக்கு காரணமானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் ஆயுதம் மற்றும் பைக் கொடுத்ததாக கூறப்படும் தீபக் என்பவரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.