கமல்ஹாசனுக்கு பன்னீர்செல்வம் ஆதரவு!அமைச்சர்களை சாடல்..

Default Image
நடிகர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமே தவிர அவரைக் குறைசொல்லக் கூடாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ்‘ நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லா துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் உள்ளது எனக் குறிப்பிட்டுப் பேசினார். கமலின் இந்தக் கருத்துக்கு, அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், அன்பழகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

‘தான் நடத்தும் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அரசின்மீது சேற்றை வாரி வீசுவதா’ என்று கமல்ஹாசனுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். ‘கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் ஓர் ஆளே கிடையாது” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கமலை ஒருமையில் விமர்சித்தார்.

கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்பட வாக்களித்த அனைவருக்கும் உண்டு. விமர்சனங்களில் உள்ள உண்மையைப் புரிந்து கொண்டு விளக்கம் அளிப்பது தான் ஜனநாயகத்தின் அழகு’ என்று குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் இன்று புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி ”நடிகர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமே தவிர அவரைக் குறைசொல்லக் கூடாது. அவரைப் பழிக்கக் கூடாது’ என்று எடப்பாடி பழனிசாமி அணியை சாடியும் கமலுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ‘கமலை மிரட்டுகின்ற வகையில் தமிழக அமைச்சர்கள் செயல்படக் கூடாது. ஜனநாயகத்தில் கருத்து சொல்ல அனைவருக்குமே வாய்ப்புண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்