மணத்தட்டையில் மணல் அள்ள எதிர்ப்பு:ஆர்.டி.ஓ பேச்சு வார்த்ததையில் உடன்பாடு இல்லை
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, மணத்தட்டை பகுதியின் காவிரி ஆற்றில், மணல் அள்ள அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால், நேற்று, குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., விமல்ராஜ் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது, மணத்தட்டை மக்கள் தரப்பில் கூறியதாவது: காவிரியில், அதிகளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மணல் எடுத்தால் இயற்கை வளம் பாதிக்கப்படும். மணப்பாறை – மருங்காப்புரி கூட்டுக் குடிநீர் தொட்டி மற்றும் நகராட்சி குடிநீர் தொட்டியும் உள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். காவிரி பாலம் சேதமடைந்துவிட்டது. எனவே, மணத்தட்டை பகுதியில் மணல் எடுப்பதை அரசு கைவிடவேண்டும். இருந்தும், மணல் எடுக்க அரசு முன்வந்தால் பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, ஆர்.டி.ஓ., விமல்ராஜ் கூறுகையில், ”குடிநீர் தட்டுப்பாடு குறித்து உடனடி தீர்வு காணப்படும்.
அரசின் கொள்கை மற்றும் விதிமுறைக்கு மாறாக மணல் எடுக்கப்படாது. எனவே, பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்,” என்றார். இருந்தும், இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மக்கள் கூட்டத்தின் பாதியில் எழுந்து வந்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு மக்கள் கலைந்து சென்றனர்..