ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன்.! நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.!
இன்று நள்ளிரவில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தில் சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது.
2020ல் நிகழும் 2வது சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்திற்கு ‘பெனம்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வருகையில் பூமி நிலாவின் மீது சூரிய ஒளி படாமல் மறைக்கும். ஆனால், இன்று நிகழும் சந்திர கிரகணத்தில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதில்லை. கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் நிழலின் வெளிப்பகுதி என்ற புறநிழல் சந்திரன் மீது விழுகிறது. அப்போது, சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது.
சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சந்திரகிரகணம் இந்திய மற்றும் இலங்கை நேரப்படி 5 ஆம் தேதியான இன்று நள்ளிரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை தெரியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களிலும், இந்தியாவில் தெளிவான வானிலை இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் இதனையடுத்து ஜூலை 5 ஆம் தேதி மற்றும் நவம்பர் 30 ஆம் தேதிகளில் சந்திரகிரகணம் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் 10ம் தேதி ‘புறநிழல் நிலவு மறைப்பு’ என்ற சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இந்த ஆண்டில் நான்கு முறை சந்திர கிரகணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.