மும்பையின் பரபரப்பு மிகுந்த பாந்தரா- ஒர்லி கடல் இணைப்பு பகுதியில் பிரபல வான்கடே ஸ்டேடியத்தை நோக்கியபடி அமைந்துள்ளது “ஸ்போர்ட்ஸ் ஃபீல்டு’. மும்பையில் லட்சக்கணக்கான அடுக்கு மாடி குடியிருப்புகள் இருந்தபோதிலும், இது மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.
இந்த ஒன்பது மாடிக்கட்டடத்தில் வசிப்பவர்கள் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள். இந்தக் குடியிருப்புவாசிகளில் பன்னிரண்டு பேர்கள் இந்திய அணியில் இடம்பெற்று, விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள். இவர்களில் ஆறுபேர், இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன்களாக இருந்திருக்கிறார்கள். இன்னொருவர் பில்லியர்டு சாம்பியன். இன்னொரு நபர் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன். இவர்களைத்தவிர மூன்று பேர்கள் சர்வதேச அளவில் ஆடிய டென்னிஸ் மற்றும் பாட்மின்டன் வீரர்கள்.
மகாராஷ்டிர அரசிடமிருந்து சுமார் 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை 99 வருட குத்தகைக்கு வாங்கி, 1987இல், இந்த அடுக்கு மாடிக்குடியிருப்பு உருவானது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர்.
ஒன்பதாவது மாடியில் வசித்த அஜித் வடேகர் இப்போது மறைந்துவிட்டாலும் அவரது குடும்பத்தினர் அங்கேயே வசித்து வருகிறார்கள். எட்டாவது மாடியில் சுனில் கவாஸ்கரது அப்பார்ட்மென்ட் உள்ளது.
அதற்குக் கீழே உள்ள தளத்தில், 1959இல், இந்திய அணிக்குத் தலைமை தாங்கி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் முறையாக வெற்றி பெற்ற கி.எஸ். ராம்சந் த், இன்னொரு மூத்த கிரிக்கெட்டரான வினு மன்காட் ஆகியோரின் அப்பார்ட்மென்ட்கள் உள்ளன.
இந்திய அணிக்கு ஆடிய வினு மன்காடின் கிரிக்கெட்டர் மகன் அஷோக் மன்காட்டும் அவரது மனைவி நிருபமாவும் வசித்து வந்தனர். நிருபமா இந்தியாவின் டாப் டென்னிஸ் வீராங்கனையாக விளங்கியவர். தற்போது வினு மன்காட், அஷோக் மன்காட் இருவரும் உயிருடன் இல்லை.
அவர்களுக்குக் கீழே, ஆறாவது தளத்தில் பாலி உம்ரேகர் வசித்துவந்தார். அவர் 2006 இல் மரணமடந்தபோது, ஸ்போர்ட்ஸ் ஃபீல்டு வளாகமே சோகத்தில் ஆழ்ந்தது.
அதே மாடியில் வசித்த இன்னொருவர் சூப்பர் பந்து வீச்சாளரான ஆர்.ஜி.நட்கர்னி.
ஐந்தாம் மாடிவாசிகள் திலீப் வெங்சர்காரும், முன்னாளில் மும்பை அணிக்காக ஆடிய சரத் திவாத்கரும். சரத், ஸ்டேட் பாங்க்கில் அதிகாரியாகப் பணியாற்றியதால், குடியிருப்போர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை அவரே கவனித்துக் கொண்டார். அதற்குக் கீழே வசிப்பவர் ரவி சாஸ்திரி. அவருடன் வசிக்கும் இன்னொருவர் யஜுர்விந்திர சிங்.
மூன்றாவது மாடி வாசிகள் : பில்லியர்டு சாம்பியன் வில்சன் ஜோன்ஸ் மற்றும் உமேஷ் குல்கர்னி (பந்து வீச்சாளர்) இரண்டாவது மாடியில் உள்ள அபார்ட்மென்ட்கள் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் ராம்காந்த் தேசாய் மற்றும் பாட்மின்டன் ஆட்டத்தில் பல பதக்கங்கள் வென்ற பிரதீப் காந்தேயுடையவை. முதல் மாடிவாசிகள்: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சோமையா (1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன்). ஏக்நாத் சோல்கர் (ஆல்ரவுண்டர்).
ஸ்போர்ட்ஸ் ஃபீல்டுவாசிகளுக்கு, கடந்த காலங்களில் ஏற்பட்ட பல அனுபவங்கள் மறக்கமுடியாதவை. பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் காலையில், வெங்சர்க்கார் தன் காரைத் திறந்தபோது, அதிலிருந்த மியூசிக் சிஸ்டம் களவாடப்பட்டு இருந்தது.
விஷயத்தைக் கேள்விப்பட்டு, எல்லோரும் கார்கள் நிறுத்தும் பகுதியில் திரண்டனர். போலீசில் புகார் கொடுக்கலாம்! அவர்கள் திருடனைக் கண்டுபிடித்து, மீட்டுக் கொடுப்பார்கள்!’ என மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது வந்த திருடன் வெங்சர்க்கார் காரிலிருந்து மட்டுமில்லாமல், எல்லோருடைய கார்களிலிருந்தும் மியூசிக் சிஸ்டத்தை களவாடிக்கொண்டு போய்விட்டது! அதிலும், கவாஸ்கருக்கு அதிர்ஷ்டம்.
காரணம், இந்த சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் மியூசிக் சிஸ்டத்தை இன்சூர் செய்திருந்தார். இதில் தமாஷ் என்னவென்றால், புகார் கொடுத்ததன்பேரில் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள், தாங்கள் வந்த வேலையைப் பார்ப்பதைவிட, கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதில்தான் அதிக சுறுசுறுப்பு காட்டினார்கள். இந்த சம்பவத்துக்குப் பின், அந்த வளாகத்துக்குள் விசிட்டர்களுக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன.
source from : dinamani