அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. வேளாண்மை (சுய நிதி), பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 8.5.2017 முதல் 31.5.2017 வரை பதிவு செய்யப்பட்டன.
பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கு 13,754 விண்ணப்பங்களும், பி.எஸ்சி., வேளாண்மை (சுயநிதி) படிப்புக்கு 2,082 விண்ணப்பங்களும், பி.எஸ்சி., தோட்டக்கலை படிப்புக்கு 1,102 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் 322 பி.எஸ்சி., வேளாண்மைப் படிப்புக்கான விண்ணப்பங்களும், 52 வேளாண்மை (சுயநிதி), 14 தோட்டக்கலை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
மேற்கண்ட படிப்புகளுக்கு “சமவாய்ப்பு’ எண்கள் (Random Number) 7.7.2017 அன்று வழங்கப்பட்டன.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் தி.ராம்குமார் வரவேற்றார். பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார். பி.எஸ்சி., வேளாண்மை (சுயநிதி) படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வெளியிட்டார். பி.எஸ்சி., தோட்டக்கலை படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் எம்.உமாமகேஸ்வரன் வெளியிட்டார்.
மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளமான www.annamalaiuniversity.ac.in இல் தங்களது தரவரிசையை (Rank) தெரிந்து கொள்ளலாம்.
பி.இ. படிப்புக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு: மேலும், பி.இ. படிப்புக்கான “சமவாய்ப்பு’ எண்களை பல்கலைக்கழகப் பதிவாளர் க. ஆறுமுகம், இளநிலை மீன்வள (பிஎஃப்எஸ்சி) படிப்புக்கான “சமவாய்ப்பு’ எண்களைத் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், இளநிலை தொழில்முறை சிகிச்சை (பிஒடி) படிப்புக்கான “சமவாய்ப்பு’ எண்களை வேளாண்புல முதல்வர் வி.ரவிச்சந்திரன், இளநிலை இயற்பியல் சிகிச்சை (பிபிடி) படிப்புக்கான “சமவாய்ப்பு’ எண்களை கல்வியியல் புல முதல்வர் ஆர்.பாபு ஆகியோர் வெளியிட்டனர்.
மாணவர்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மாணவர்கள், மேல்நிலை (ஏநஇ) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிகளின்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வு அட்டவணை, கலந்தாய்வுக்கான அனுமதிக் கடிதத்தைத் தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம். தனியாக கலந்தாய்வுக் கடிதம் அனுப்பப்படமாட்டாது.
நிகழ்ச்சியில் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எம்.அருள் மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் டி.ராம்குமார் செய்திருந்தார்.
பின்னர், துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2017}18ஆம் கல்வி ஆண்டில் பி.இ. மொத்தம் 1,020 இடங்களுக்கு அனுமதி சேர்க்கை நடைபெறும். மொத்தம் 1,655 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பிஒடி படிப்புக்கு 30 இடங்களிலும், பிபிடி படிப்புக்கு 30 இடங்களிலும் அனுமதி சேர்க்கை செய்யப்படும்.
பி.எஸ்சி., வேளாண்மைப் படிப்பில் தரவரிசைப் பட்டியலில் குன்னத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீஜெயபிரியா முதலிடத்தையும் (கட்}ஆஃப் 199.75), நாமக்கல் மாணவி பி.கே.இந்துமதி இரண்டாம் இடத்தையும் (கட்}ஆஃப் 199.5), ஊத்தங்கரை மாணவி எம்.சிவரஞ்சனி மூன்றாமிடத்தையும் (கட் }ஆஃப் 199.00) பெற்றுள்ளனர்.
பி.எஸ்சி., வேளாண்மை (சுயநிதி) படிப்புக்கு சேலம் மாணவி எம்.கீதாம்பரி (கட் }ஆஃப் 196.5) முதலிடத்தையும், ஒசூர் மாணவி டி.சுனந்தரா (கட்}ஆஃப் 195.25) இரண்டாமிடத்தையும், குன்னம் மாணவி டி.ஜெயமுனி (கட்}ஆஃப் 195) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
பி.எஸ்சி., தோட்டக்கலை படிப்புக்கு மேட்டூர் மாணவர் எஸ்.ஜெகபிரதீன் (கட்}ஆஃப் 195) முதலிடத்தையும், உதகையைச் சேர்ந்த மாணவர் எஸ்.நித்தீஷ் (கட்}ஆஃப் 198) இரண்டாமிடத்தையும், அரூர் மாணவர் வி.ரமேஷ்குமார் (கட்}ஆஃப் 196.25) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
பி.எஸ்சி., வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ. 37,430, பி.எஸ்சி., வேளாண்மை (சுயநிதி) படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளமான www.annamalaiuniversity.ac.in பார்க்கவும். தொடர்புக்கு [email protected] மின்னஞ்சலிலும், 04144}238348, 238349 ஆகிய உதவி மையத் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.