சென்னையில் 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம்.!
சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 13,370 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,446 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,678 பேரும், திரு.வி.க. நகரில் 1,437 பேரும், தேனாம்பேட்டையில் 1,500 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,425 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1143 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 13362 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.