ஜெயலலிதா மீதான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று திமுக எம்.பி. குப்புசாமி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உந்நநிதிமன்றம் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில் வழக்கு நடைபெற்றது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போதே குப்புசாமி எம்.பி. மரணமடைந்து விட்டதால், அதைக் காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால் விசாரணை தொடங்கியதும், ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் தற்போது இந்த வழக்கு காலாவதியாகி விட்டது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.