அடுத்த ரஜினி,கமல் தான் டி.டி.வி. தினகரன்!மூவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை …..
புதுச்சேரி அ.தி.மு.க சட்டமன்றக் குழு உறுப்பினர் அன்பழகன் ரஜினி, கமல் போலத்தான் டி.டி.வி.தினகரனும் கட்சி ஆரம்பித்திருக்கிறார்” என விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்பழகன், “முழுமையான பட்ஜெட் போடத் தெரியாத முதலமைச்சர் என முன்னாள் முதல்வர் ரங்கசாமியை விமர்சித்தவர், நாராயணசாமி. ஆனால், தற்போது முதல்வராகியிருக்கும் நாராயணாசாமி, மூன்றாவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்செய்ய இருக்கிறார். முழுமையான பட்ஜெட் போட முடியாத தோல்வியை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும். வெறும் 3 நாள்கள் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில், நிதிநிலை தொடர்பாக என்ன விவாதம் செய்ய முடியும்? வெற்று விளம்பரத்திற்காக 2 ஆண்டுகளை வீணடித்துள்ளார் நாராயணசாமி. கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டும் செயலை மட்டும் நாராயணசாமி செய்து வருகிறார். ஆனால், மக்களுக்குச் செய்யவேண்டிய நலத்திட்ட உதவிகள் இதுவரை செய்யப்படவில்லை.
கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு தொடர்பாக, ஆளுநர் கிரண்பேடி நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதில், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கல்லூரிக்கே செல்லாத சிலர், கூட்டுறவுத் துறையில் மேலாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தலைமைச்செயலாளர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால், எப்போதும் உண்மை வெளிவராது. அதனால், அங்கு நடைபெறும் முறைகேடுகள்குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட வேண்டும். கூட்டுறவு வங்கிக்குச் சென்று ஆய்வுசெய்ததுபோல பி.ஆர்.டி.சி, பாசி, காதிபோர்டு போன்ற அரசு சார்பு நிறுவனங்களுக்கும் சென்று ஆளுநர் கிரண்பேடி ஆய்வுசெய்ய வேண்டும்
. டி.டி.வி. தினகரன் கட்சி ஆரம்பிப்பதால், அ.தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினி, கமலைப் போல டி.டி.வி. தினகரனும் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.