துணை ஜனாதிபதி தேர்தல் ஆதரவு:முதலாவதாக ஓடி வந்தார் ஓபிஎஸ்…!
பாஜக-வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்திங்களன்று நடைபெற்ற நிலையில், அதில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்தார்.அவர், செவ்வாய்க்கிழமையன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.வெங்கய்யா நாயுடு தற்போது மத்தியநகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரைஇருந்தார். மக்களவையில் நீண்ட ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். தற்போது இவர் குடியரசுத் துணைத் தலைவர் வேட் பாளராக போட்டியிடுகிறார்.எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தி – மூதறிஞர் ராஜாஜி ஆகியோரின் பேரனும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் மேற்குவங்க ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
அப்பாடா’: இந்தமுறை ஓபிஎஸ் முந்தினார்
தமிழகத்தில் பாஜக-வின் கைப்பாவையாக மாறிவிட்ட ஆளும் அதிமுக கோஷ்டிகள், பாஜகவை யார் திருப்திப்படுத்துவது? என்பதில் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோஷ்டி முந்திக்கொண்டு, பாஜக-வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இதுஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விட்டது. ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவித்த அடுத்த நொடியே, எப்படா என்று காத்திருந்ததுபோல, வெங்கய்யாநாயுடுவுக்கு எங்கள் ஆதரவு என்று அறிவித்து, எடப்பாடி கோஷ்டியை முந்தி, ஒருவழியாக ஜென்ம சாபல்யம் அடைந்துள்ளார்.