நாங்கள் தீயை அணைக்கப்போகிறோம்! நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை! – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஒரு நாட்டை நிரந்தரமாக பூட்டி போடுவது ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். அமெரிக்காவில் இதுவரை, 1,645,094 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97,647 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 1,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றுள்ளார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியுள்ளார். அப்போது, அவரிடம் நிருபர்கள், கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்போகிறோம். ஆனால், நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு நாட்டை நிரந்தரமாக பூட்டி போடுவது ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல என்றும், ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும் என்றும், நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.