ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமனம்!குரங்கணி தீ விபத்து குறித்து விரிவாக விசாரணை…
ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை குரங்கணி சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரிக்க நியமித்துள்ள தமிழக அரசு, டிரக்கிங்கை வரைமுறைபடுத்துவது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மதுரை, சென்னை, கோவை உள்பட பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொழுக்குமலைப் பகுதிக்கு முறையாக அனுமதி பெறாமல், டிரக்கிங் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து, குரங்கணி சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வருவாய்த்துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமாக அமைந்த சூழ்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிரெக்கிங்குக்கு அனுமதி அளித்தல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான வனத்துறை விதிகள் ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும், டிரக்கிங் ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் தவறுகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள், அசம்பாவிதங்கள் நேராமல் தடுப்பது குறித்து, ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையை முடித்து, அறிக்கை மற்றும் பரிந்துரைகளை 2 மாதத்தில் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.