MCI கவுன்சிலுக்கு புதிய நிர்வாகம்!
புதுடில்லி: இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, மேற்பார்வை குழுவை அமைப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதில் இடம்பெறுவோரின் பெயர்களை இன்று தெரிவிப்பதாக கூறிஉள்ளது.இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. மூன்று பேர் குழு : அதையடுத்து, நிர்வாகத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய மேற்பார்வை குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது.கடந்த, 2016, மே மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த மேற்பார்வை குழு, ஓராண்டுக்கு அல்லது மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்யும் வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைக்காவிட்டால், நாங்களே அமைக்க நேரிடும்’ என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்திருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஒத்திவைப்பு அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், ரஞ்சித் குமார் தன் வாதத்தின்போது கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தை கண்காணிக்க, மேற்பார்வை குழுவை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவர் என்பது குறித்து, இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.