அதிதீவிர புயலாக மாறி மே20-ல் கரையை கடக்கும் உம்பன்..!
உம்பன் புயல், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, மே 20-ல் கரையை கடக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது தீவர புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது.
மேலும், அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, புவனேஸ்வரில் கரையை கடக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், இந்த புயல் காரணமாக தூத்துக்குடி, நாகை, பாம்பன் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.