சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.!

விவசாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நிதியமைச்சர்.

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மூன்று தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார்.

இந்நிலையில் சுயசார்பு திட்டத்தில் நேற்று 3ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். அப்போது, விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக வெளியிடப்பட்டது. எஞ்சிய 3 திட்டங்கள் விவசாயத்துறைக்கான அரசாங்க முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு திட்டத்தில் விவசாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மேலும், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான விவசாய பொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.