கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை! கடைசி நபரும் டிஸ்சார்ஜ்!
கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை. அம்மாவட்ட ஆட்சியர் ராஜா மணி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 74,925 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு நபர் மட்டும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 145 பேரும் தினமும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பிய நிலையில், இந்த 145 பேரில், கடந்த 3-ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 31 வயதுள்ள கர்ப்பிணி பெண் மாத்திரம் சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், குழந்தைக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, கோவை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் ராஜா மணி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.