மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதா ? பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வராமல் இருக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்நிலையில் மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், புதிய திருத்தங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளது.விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசின் உரிமை ஆகும். மேலும் கொரோனா தடுப்பில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.விவசாயிகளுக்கான மின்சார மானியத்தொகை வழங்கும் முறையை தமிழக அரசே தீர்மானிக்க வகை செய்ய வேண்டும். இந்த மசோதா விவசாயிகள் மற்றும் வீட்டு உபயோக நுகர்வோரையும் இந்த சட்டம் பாதிக்கும் என்பதால் இதனை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.