மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யலாம் – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்.
கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுக்கடைகள் மற்றும் பான் மசாலா கடைகள் திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும். இதன் விளைவால் மக்கள் அவதிப்படும் சூழல் ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அனின்திதா மித்ரா வழக்கு ஒன்று தொடுத்து இருந்தார். இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், பிஆர் கவாய் ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் கூறுகையில், கடைகளில் நேரடியாக மது விற்பனை செய்வதை தவிர்க்க முயற்சி செய்யலாம் என்று கூறியுள்ளது. பின்னர் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் நிற்கும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மது விற்பனை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் உத்தரவு பிறப்பிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து அறிவுறுத்த மட்டுமே முடியும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.