மதுக்கடைகளை மூட மும்பை மாநகராட்சி உத்தரவு.!
மும்பையில் இன்று முதல் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைமையாக கொண்ட மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை மும்பையில் தான் பாதிப்பு அதிகம். மும்பையில் நேற்று மட்டும் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மும்பையில் இதுவரை 9,758 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 387 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று முதல் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 6 இன்று முதல் மதுபானக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூட வேண்டும் என்றும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையை கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக மக்கள் தனிமனித இடைவெளியை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.