திகார் சிறையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் அடைப்பு!

Default Image

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில்,  வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை(நேற்று) உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லியிலுள்ள திகார் சிறையில் உடனடியாக கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதியிடம், சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை காவலில் விசாரிக்க விரும்பவில்லை எனவும், ஆதலால் 15 நாள் நீதிமன்றக் காவலில் அவரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஏற்கெனவே தாங்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல், நீதிமன்றக் காவலில் கார்த்தி சிதம்பரம் வைக்கப்பட்டால், அவரது பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, திகார் சிறையில் தனியாக அறை ஒதுக்கித் தர வேண்டும், திகார் சிறையில் பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கை நிராகரிப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதி உத்தரவு பிறப்பிக்கையில், கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து, நீதிபதி கூறியதது…
காவலில் தொடர்ந்து எடுக்க விரும்பவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கவனத்தில் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்படுகிறது. மீண்டும் அவரை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு இருக்கும் சமூக அந்தஸ்தை மட்டும் கருத்தில் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை மற்ற குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் இருந்து வித்தியாசமாக நடத்த முடியாது. கார்த்தி சிதம்பரத்துக்கு சிறையில் தனி அறை, தனி கழிப்பறை, புத்தகம், துணிமணிகள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
அதேநேரத்தில், அந்த சிறையின் நிர்வாகி, கண்காணிப்பாளர் ஆகியோர், நீதிமன்றக் காவலில் கார்த்தி சிதம்பரம் இருக்கும் காலத்தில், விதிகளுக்கு உள்பட்டு, அவருக்கு உரிய பாதுகாப்பை செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மருந்து-மாத்திரைகளை கார்த்தி சிதம்பரம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு, ஏற்கெனவே பட்டியலிட்டபடி வரும் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தில்லி திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு வெளியான சிறிது நேரத்தில், தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் அமர்வு, உரிய நீதிபதிகள் அமர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) விசாரிக்கும் என்று அறிவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்