3 நாட்கள் கர்நாடகா பேருந்தில் கட்டணமின்றி இலவசமாக பயணித்து கொள்ளலாம்.!
3 நாட்களுக்கு பெங்களுருவில் இருந்து கர்நாடகாவில் உள்ள மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் – கர்நாடகா அரசு.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள் தங்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால், வெளியூர், வெளிமாநிலங்கள் சென்று வேலைக்கு சென்றவர்களும் பொதுமுடக்கத்தால் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களே அழைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இரு மாநிலங்களின் ஒத்துழைப்போடு இந்த நகர்வு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து, கர்நாடகா அரசு பெங்களுருவில் இருந்து கர்நாடகாவில் உள்ள மற்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருந்து சேவையை அறிவித்தது. ஒரு பேருந்துக்கு 55 பேருக்கு பதிலாக 30 பேர் மட்டுமே அனுமதிக்கபடுவர் எனவும், 3 பேர் உட்காரும் சீட்டில் 2 நபர்களும், 2 பேர் அமரும் சீட்டில் ஒருவரும் அமரும் படி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால், அரசுக்கு சுமார் 5 கோடிக்கு மேல் நஷ்டமாகும் என கூறி அதன் பிறகு பஸ் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தி அரசு அறிவித்தது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மேலும் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அந்த பணத்தை நாங்கள் தருகிறோம். பொதுமக்களுக்கு இலவசமாக பேருந்து சேவையை அளித்திடுங்கள் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, கர்நாடக அரசு, 3 நாட்களுக்கு பெங்களுருவில் இருந்து கர்நாடகாவில் உள்ள மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தது.