தூய்மை பணியார்களுக்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்த 3ஆம் வகுப்பு மாணவன்.!
3ஆம் வகுப்பு படித்து வரும் ஜெய்ஸ்ரீவர்மன் எனும் சிறுவன், தான் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நிதியுதவியாக கொடுத்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்து. பலவேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் போன்றோர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவனின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக மணிவண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெய்ஸ்ரீவர்மன் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனிடம் தூய்மை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை கூறியுள்ளார்.
இதனை கேட்டறிந்த அச்சிறுவன் தான் சைக்கிள் வாங்க சேர்த்து வரித்திருந்த 4,586 ரூபாய் பணத்தை தூய்மைப்பணியாளர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என தீர்மானித்து தனது தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து, அவரது தந்தை மணிவண்ணன், சிறுவன் ஜெய்ஸ்ரீவர்மனை பேரூராட்சி அலுவலகத்திற்கு கூட்டி சென்று சேர்த்து வைத்திருந்த 4,586 ரூபாய் நிதியை செயல் அலுவலர் குகனிடம் வழங்கியுள்ளார். அவர் அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவு வழங்க இந்த நிதி பயன்படும் என உறுதியளித்தார்.