மேற்கு வங்கத்தில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.!
மேற்கு வங்க மாநிலத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 60 வயதான மூத்த மருத்துவர் பிப்லாப் கண்டி தஸ்குப்தாவுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த மருத்துவரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்த 69 வயதான சிசிர் மண்டல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று AMRI என்ற மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே மேற்கு வங்கத்தில் 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.