மருத்துவர்கள் கருப்புப் பட்டையுடன் பணிபுரிய வேண்டுகோள்.!
கொரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும்.
அரசு மருத்துவர்கள் நாளை முதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தக்கோரி போராட்டம் என்று மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே, மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். நம்மை பாதுகாக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என்றும் மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிருந்தார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.