நீண்ட நாட்களுக்கு பிறகு கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 426 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 18,985 பேர் பாதிக்கப்பட்டு, 603 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. பின்னர் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 408 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 3 ஆக இருக்கின்றது. இந்த 408 பேரில் 291 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கு காரணம் அம்மாநிலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் கேரளாவில் 19 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணூர் 10, பாலக்காடு 4, காசராகோடு 3, கொல்லம் 1, மலப்புரம் 1 போன்ற பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 12 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா சிகிச்சையில் 117 பேர் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதுவரை 20,252 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 19,442 பேரின் மாதிரிகளில் கொரோனா இல்லையென்று உறுதியாகியுள்ளது.