ஏமாற்றுவேலை செய்கிறார் ராகுல் காந்தி…..
பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் குறித்து ராகுல்காந்தி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பேசாமல் மௌனம் காத்துவிட்டு தற்போது பேசுவதென்பது தமிழர்களை ஏமாற்றும் வேலை என குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவது:
‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதைதான் தமிழக மற்றும் புதுச்சேரி பாஜக வலியுறுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்பதுதான் பிரதமரின் கருத்துமாகும். ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக ஒரு சிலர் தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை பற்றி நீதிமன்ற நடைமுறை தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவரோ, குற்றவாளித் தரப்போ அவர்களின் கருத்துகளை கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதில்லை. இத்தனை ஆண்டுகாலம் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது மௌனமாக இருந்துவிட்டும், ஆட்சியில் இருக்கும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை சொல்லாமல், இப்போது கருத்துகளை சொல்வது குற்றவாளிகள் மீதுள்ள கரிசனத்தால் அல்ல. மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்கும், ஒரு எளிமையான விளம்பரத்தை தேடுவதற்காகவும் இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இதுவரை குற்றவாளிகளுடையகருணை மனு எந்தகாலத்திலும் இல்லாத அளவுக்கு குடியரசுத் தலைவரின் மேஜையில் நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்தது யார் ஆட்சி காலத்தில் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ராகுல்காந்தி தற்போது பேசுவதை எந்த தமிழரும் நம்ப மாட்டார்கள். இது ஒரு ஏமாற்று வேலை’’ என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.